Thursday, March 10, 2011

போலீஸ் ஏட்டு மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு



பெரியக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


முத்தியல்பேட்டை பாரதிதாசன் நகரில் வசிப்பவர் ரங்கநாதன். இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார். இவருடைய மனைவி பாமா (வயது 52). இவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியக்கடை காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ஜான் ரூ.1 லட்சம் கடன்  வாங்கினார். அக் கடனை  காசோலை மூலம் திருப்பி செலுத்துவதாக கூறிய ஜான்,  மூன்று மாதம் கழித்து எடுத்து கொள்ளும் வகையில் முன் தேதியிட்டு தனது  கையப்பம் இட்ட காசோலையையும் பாமாவிடம்  வழங்கியிருந்தார்.
அதன்படி மூன்று மாதம் கழித்து காசோலையை வங்கியில் போடுவதற்கு பாமா முயற்சித்தார். அப்போது ஏட்டு ஜான் தற்போது தனது வங்கி கணக்கில் பணம் இல்லை,  அடுத்த மாதம் சென்று பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதன்படி டிசம்பர் மாதம் பாமா வங்கியில் காசோலையை செலுத்தி பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் ஜான் கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பியது.
இது தொடர்பாக பாமா கேட்ட போது, ஏட்டு ஜான் மறுத்தாராம். கடனே வாங்க வில்லை என்றும், தொலைந்து போன காசோலையை வைத்து பணம் கேட்பதாக பாமாவை கண்டித்தாராம். இதனைத் தொடர்ந்து பாமா புதுச்சேரி நீதிமன்றத்தில் கடன் பெற்று ஏமாற்றிய போலீஸ் ஏட்டு ஜான் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஏட்டு ஜானை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment